வரலாறு

கணேஷ மகா வித்தியாலயத்தின் நடைபவனி

WELCOME.jpeg
WELCOME.jpeg

மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுள் பாடசாலைகள் மட்டுமே கல்வியுடன் நல்லொழுக்கப் பண்புகளையும் வழங்கி மாணவர்களை நல்வழிப்படுத்துகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரின் மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்த சேனைக்குடியிருப்பு கணேச வித்தியாலயமும் தன் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

 இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்ட காலத்தில்  அதாவது 1860 காலப் பகுதியில் இலங்கையருக்கு கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை மக்களின் கோரிக்கைக்கு அமைய ஆங்கில மொழிக் கல்வியில் இருந்து சுய பாசை மொழிக் கல்விக்கான அத்திவாரம் இடப்பட்ட வகையில் கிராமங்கள் தோறும் பாடசாலைகளை அமைப்பதில் ஏற்பட்ட மறுமலர்சியின் விளைவால், 1880ம் ஆண்டளவில் சேனைக்குடியிருப்பு கிராமத்தில் சிறிய ஒரு ஓலைக் கொட்டிலில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

அப் பாடசாலையில் வயது அடிப்படையில் முதலில் ஐந்து மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப் பாடசாலைக்கு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார் அவரும் அவரது குடும்பமும் குடியிருக்கத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அப் பாடசாலை படிப்படியாக வளர்ச்சியடைந்தது. அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.

 பின்னர் 1905ம் ஆண்டளவில் அரச உதவியோடு செங்கல், நீறு மணல், சேரத்து கட்டக் கூடிய ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் ஒரு ஆசிரியரே போதனை செய்தார். 1928-05-01 ம் திகதி திரு W. S செல்லையா அவர்களைத் தலைமையாசிரியராகக் கொண்டு ஓலையால் வேயப்பட்ட ஒரு கொட்டிலில் 19 மாணவர்களுடனும் 2 ஆசிரியர்களுடனும் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயருடன் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

இப் பாடசாலையின் வளர்ச்சிக்காக உழைத்த ஆசிரியர்கள், அதிபர்களை நன்றியுடன் நினைவு கூர்வோமாக. திரு E.K. சீனித்தம்பி, திரு.R. சின்னையா, திரு.R. மாரிமுத்து, திரு. K. வீரசிங்கம், திரு A. அழகையா, திரு. T. நடராசசிங்கம், திரு. K. சந்திரலிங்கம், திரு. T. பூவேந்திரன் ஆகிய அதிபர்களின் சேவைக் காலம் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியதாகும்.

1984ல் அதிபராக நியமனம் பெற்ற திரு A. அழகையா, அவர்களின் சேவைக் காலம் பாடசாலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதே. ஆரம்பப் பாடசாலையாக இருந்த இப் பாடசாலையை வருடாந்தம் வகுப்புகளை உயர்த்தி 1993ல் 1 C மகா வித்தியாலயம் ஆக்கிய பெருமை இவரையே சாரும். அக் காலங்களில் இயங்கிய பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு. எம். நல்லதம்பி குருக்கள் அவர்களின் பங்களிப்பும் பாராட்ட வேண்டியதே திரு.A. அழகையா அதிபர் அவர்களின் சேவையில் பாடசாலை பின்வரும் வளர்ச்சிகளைக் கண்டது.

  • 1991ல் முதன்முதல் க. பொ. த (சா/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் ஆறு மாணவர்கள் உயர்தர வகுப்புக்குத் தகுதி பெற்றனர்.

 

  • மகா 1993ல் உயர்தர கலைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 1 c வித்தியாலயமானது. C 1995ல் முதன்முறையாக (கலைப்பிரிவு) 7 க. பொ. மாணவர்கள் த (உ/த) பரீட்சைக்கு தோற்றிச் சகலரும் சித்தியடைந்ததுடன் 3 மாணவர்கள் பல்கலைகழகம் சென்றனர்.

 

  • மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் 1991 இல் ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்தனர். 1994ல் இப் பாடசாலை எஸ். ஈ. டீ. பி திட்டத்தில் சேர்க்கப்பட்டு பல கிடைக்க வசதிகளும் மாடிக்கட்டிடங்களும் தளபாட வித்திடப்பட்டது.

 

1994ல் பிரதியதிபராக திரு. T. நடராசசிங்கம் அவர்கள் இங்கு நியமனம் பெற்றது அதிபரின் சேவைக்குப் பேருதவியாக அமைந்ததைக் குறிப்பிடலாம். அதிபர் திரு. A. அழகையா அவர்களுடன் பிரதியதிபரும் இணைந்து இப் பாடசாலை எஸ்.ஈ.டீ. பி திட்டத்தில் இணைந்ததன் பேரில் நாம் இன்று காணும் மாடிக் கட்டிடங்கள், விஞ்ஞான மனையியல் கூடங்கள், ஒன்றுகூடல் மண்டபம் ஆகியவற்றைப் பெற வழி சமைத்தனர். இவற்றிற்கெல்லாம் பேருதவி புரிந்த முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திரு. க. தியாகராசா அவர்கள் எமது நன்றிக்குரியவர்.

 

1995-09-28 ல் திரு. A. அழகையா அதிபர் அவர்கள் தனது 60 வயதில் ஓய்வு பெற்றதன் பின்பு பிரதியதிபரான திரு. T. நடராசசிங்கம் அவர்கள் அதிபராக நியமனம் பெற்று சேவையாற்றினார். இவரின் சேவை ஈடு இணையில்லை. நல்ல முகாமைத்துவ திறனாலும், சிறந்த வழிகாட்டலாலும் ஆசிரியர்களின் அயரா உழைப்பினாலும் பாடசாலை கல்வி, பௌதீக துறையில் வளர்ச்சி கண்டது.

 

1995ல் இருந்து திரு. T. நடராசசிங்கம் அதிபர் அவர்களின் சேவைக் காலத்தில்

  • 1996ல் ஒரு மாணவனும் 1997 ல் மூன்று மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்றனர்.
  • 1997ல் தரம் 05 ஸ்கொலசிப் பரீட்சையில் 5 மாணவர்களும்
  • 1998ல் 7 மாணவர்களும் சித்தி பெற்றனர்.
  • அவரின் காலத்தில் ஒன்றுகூடல் மண்டபம், தொலைபேசி வசதி ஆகியனவும் காரியாலயத் தளபாடங்களும் கிடைக்கப் பெற்றன.

 

இப் பாடசாலையின் வரலாற்றில் குறிப்பிட்டுக் கூறத்தக்க அதிபர் வரிசையில் திரு. காளிக்குட்டி சந்திரலிங்கம் அதிபரைக் கூறாமல் இருக்க முடியாது. இவர் கொழும்பில் வசதியான பாடசாலையில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது தனது சொந்த மண்ணில் தனது கிராமத்தில் சேவையாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு தனது வசதி வாய்ப்புகளை எல்லாம் விட்டு 2006 இல் இப் பாடசாலையில் அதிபராகப் பொறுப்பேற்றார்.

 

இவரது சேவைக்காலத்தில் இவரது சிறந்த வழிகாட்டலினால் பாடசாலை பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டது. அந்த வகையில் எமது பாடசாலையில் நீண்டகாலமாக சிறுவர் பூங்கா இல்லாத நிலை காணப்பட்டது. இக் குறையினை நீக்கி ஆசிரியர்களின் உதவியுடன் அழகான சிறுவர் பூங்கா ஒன்றை அமைத்த பெருமை இவரையே சாரும். அடுத்து அடுத்து இவரது முயற்சியினால் இரண்டு மாடிகளைக் கொண்ட வகுப்பறை கட்டிடங்கள் இரண்டு கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கணினி ஒன்று கூட இல்லாத நிலையில் இருந்த பாடசாலைக்கு தனது முயற்சியினால் கணினி வள நிலையம் ஒன்றை கொண்டு வந்தார்.

 இவ்வாறு பெளதிக தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு இவரது செயற்பாடுகள் நின்று விடாமல் கல்வி தொடர்ந்தன. பாடசாலையின் வரலாற்றில் முதன் முதலாக மாணவர்களது ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் முகமாக மாபெரும் கண்காட்சி ஒன்றை தனது தலைமையில் நடாத்தி வெற்றியும் கண்டார். இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஆங்கில் பேச்சு போட்டியிலும் விளையாட்டில் நீளம் பாய்தலிலும் மாணவர்கள் அகில இலங்கை மட்டம் வரை பங்கு பற்றி வெற்றி கண்டமை இவரது சேவைக் காலத்திலேயே தான். இதனை இப் பாடசாலை பெற்ற மிகப்பெரிய சாதனையெனலாம்.

 கல்வி வளர்ச்சிக்காக மாலைநேர வகுப்புக்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட இவரது அயராத முயற்சியினால் இவரது சேவைக் காலத்தில் உயர்தர பிரிவில் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும், கல்வியல் கல்லூரிகளுக்கும் சென்றமையும், க.பொ.த சாதாரண தரத்தில் அடைவுமட்டம் அதிகரித்தமையும் இவரது சேவைக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு 2006 - 2011வரை சுமார் ஆறு வருடங்கள் மட்டுமே இக் கல்லூரியில் சேவை ஆற்றினாலும் இவரது சேவைக் காலம் என்றென்றும் மாணவர் மற்றும் கிராமத்து மக்களால் நினைவு கூரப்படும்.

தற்போதைய அதிபர் அவர்களின் காலத்தில் எமது பாடசாலை மேலும் வளர்ச்சி கண்டுள்ளது. வருடா வருடம் குறிப்பிட்டுக் கூறக்கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்கின்றனர். க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் அதி விஷேட சித்திகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இணைப் பாட விதானச் செயற்பாடுகளிலும் எமது மாணவர்கள் வலய, மாகாண மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர். அண்மையில் இந்தப் பாடசாலையின் நூலகம் அதனது உன்னத சேவை வழங்கலுக்காக தேசிய ரீதியில் சிறந்த நூலகமாக தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் தெரிவு செய்யப் பட்டது. அதற்காக அரும்பாடு பட்ட நூலகப் பொறுப்பாளர் அருட் சகோதரர் அ. தேவராஜா அவர்களை இந்தக் கிராமம் என்றும் நினைவில் நிலை நிறுத்தும். அதிபரின் சேவைக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றும் பிரதி அதிபரின் பணியும் ஏனைய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையும் எதிர் காலத்தில் இந்தப் பாடசாலை மேலும் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது என்பதைக் கட்டியம் கூறி நிற்கின்றன.